புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஜூலை.20) கூடுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று(ஜூலை 18) நடைபெற்றுவரும் அமைச்சரவை கூட்டத்தில், பல முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை கூட்டத்தொடர் திங்கள்கிழமை(ஜூலை 20) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் தொடங்க உள்ள கூட்டத்தொடரில், 12:30 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் உரை குறித்தும் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய நிதிநிலை அறிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சற்றுநேரம் முன்பு தொடங்கியுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு துறைச் செயலர்கள், தலைமைச் செயலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தாண்டின் கடைசி காலாண்டு நிதிநிலை அறிக்கை என்பதால் அதில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.