புதுச்சேரியின் மின்தேவைக்கு வெளியில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதை பெருமளவு குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதற்காக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, மின் சேமிக்கும் சாதனங்களை பொருத்தி புதுச்சேரியின் தேவையை குறைப்பது என்று பல்வேறு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக புதுச்சேரியில் அரசு கட்டடங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்திக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதுவரை 22 அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின்சாதனங்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு கொண்டு வரபட உள்ளது. அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவையில் 15 லட்ச ரூபாய் செலவில் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் சூரிய ஒளி தகடுகள்(சோலார் பேனல்) பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 20 கிலோவாட் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து தயாரிக்க முடியும். இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பயோ டேரக்ஷனல் என்ற மின்மீட்டரில் நேரடியாக இணைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மின்சாரம் முழுவதையும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதோடு, மீதமுள்ள மின்சாரம் மின்துறைக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி சாதனங்கள் ஒரு நாளைக்கு நூறு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். அதன்படி சட்டப்பேரவையில் ஒரு மாதத்துக்கு மூன்றாயிரம் யூனிட்டும், ஒரு ஆண்டுக்கு சராசரியாக 30 ஆயிரம் யூனிட் மின்சாரத்தையும் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய முடியும் என புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிப்படியாக இதன் அளவை அதிகரித்து, சட்டப்பேரவை முழுமையும் சூரிய ஒளி மின்சக்திக்கு மாற்றப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.