புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சிப் பொறுப்பாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரவி சீனிவாசன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேர்மையான நிர்வாகத்திறமை உள்ள ஆட்சியை அடித்தட்டு மக்கள் முதல் அனைவருக்கும் வழங்கியதால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டெல்லியில் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
அனைவருக்கும் இலவசமான, தரமான மருத்துவம் போன்ற பலத்திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியதன் விளைவுதான் இந்த நற்பெயர் என்று அவர் மேலும் கூறினார்.
மற்ற மாநிலங்களில் 8 முதல் 10 விழுக்காடு நிதியை மட்டும் கல்விக்காக ஒதுக்கும்போது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 25 விழுக்காடு கல்விக்காக ஒதுக்கியுள்ளது என்ற அவர், புதுவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
கட்சியில் இணைய மிஸ்டு கால் கொடுத்தால் போதும் எனவும், இதுவரை ஏழாயிரம் பேர் புதுவையில் புதிதாக இணைந்துள்ளனர் என்றும் ரவி சீனிவாசன் கூறினார். டெல்லி போன்று சிறந்த ஆட்சியை, புதுவையிலும் ஆம் ஆத்மி விரைவில் அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: கல்விக்கட்டண உயர்வு: போராடிய மாணவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது!