கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன. அதேபோல், மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
அந்த வகையில், புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் மதுபான கடையின் குடோனுக்கு கலால் துறை சார்பில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சீல்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று குடோனின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர். குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் இது குறித்து கடையின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதையடுத்து, சிசிடிவியில் பதிவாகியிருந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி, சந்துரு ஆகிய இருவரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க:மூவர்ணக் கொடி போர்த்திய ஆல்ப்ஸ் மலை!