புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2019-20ஆம் கல்வி ஆண்டில் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணத்தை குறைக்க வேண்டும், புதுவையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 விழுக்காடு இடங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவைப் பல்கலைக்கழக மாணவர் பேரவை போராட்டம் நடத்திவருகிறது.
மாணவர்களின் இக்கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றும், மாணவர்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், புதுச்சேரி ராஜா சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்பு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 5945 குழந்தைகள் அரசிடம் வந்துள்ளன' - அமைச்சர் சரோஜா தகவல்