புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இன்று பல கிராமங்களில் இருந்த 62 பேரை, உமிழ் நீர் சோதனை செய்ததில் 61 பேருக்கு கரோனா தொற்று இல்லை. கரோனா தொற்றுடன் இருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் மூன்றில் ஒரு பங்கு, அரசு ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்.
பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பொருள்கள் வாங்க அறிவுத்தியபோதும் மக்கள் மதிப்பளிக்கவில்லை. புதுச்சேரியில் எந்த தொழிற்சாலைகளும் திறக்கப்படவில்லை. விவசாயிகள் தங்கள் வேலையை ஆரம்பித்து உள்ளார்கள். கட்டடத் தொழிலாளர்கள் தங்களது பணிகளை செய்து வருகின்றார்கள். இடையில், நிற்கின்ற கட்டடங்கள் பணியைத் தொடராமல் இருந்தால், அதனைத் தொடரத் தடை இல்லை. அரசு அலுவலர்கள் இதனைத் தடுக்கக்கூடாது.
கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 220 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றார்கள். விவசாய கூலித் தொழிலாளிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.
பிப்ரவரி இறுதியில் அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு மத்திய அரசு உதவி புரியும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் துணை நிலை ஆளுநர் மக்களுக்கு பணமாகத்தான் தரவேண்டும் என்றும் கோரி இருந்தார். எங்களது அரசு அதனை எதிர்த்ததால், கால தாமதம் ஆனது. இதனால் 40 விழுக்காடுதான் தற்போது வழங்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநரின் பல உதவாத திட்டங்களால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் மத்திய அரசை நாடி மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து வருகின்றார்.
அரசு திட்டங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றார். இதுகுறித்து பாரத பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தேன். மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. துணை நிலை ஆளுநர் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னிடம் பேசிய பாரத பிரதமரிடம் தெரிவித்தேன். மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெளியே வந்தால், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கடை திறக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... 'அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து' - நாரயணசாமி எச்சரிக்கை