நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சோதனைச்சாவடி வழியாக இருசக்கர வாகனங்களில் கள்ளச்சாராயம் கடத்தி செல்வதாகவும், அதனை காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் புகார்களும் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வழக்கம்போல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயத்தை கடத்திக்கொண்டு வேகமாக வந்துள்ளனர். அப்போது சோதனைச் சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சாராயத்துடன் வந்த கடத்தல் கும்பல் கூட்ட நெரிசலில் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் சுப நிகழ்ச்சிக்கு சென்று குடும்பத்தோடு திரும்பிக் கொண்டிருந்த காரைக்கால் மாவட்டம், கீழே வாஞ்சூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது 8 வயது மகளின் பற்கள் உடைந்து உதடுகள் கிழிந்து காயம் ஏற்பட்டது. மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் சுமார் 1000 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை சாலையில் போட்டுவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராய கும்பல்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறுமி மற்றும் இளைஞர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சாராயம் கடத்தி வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், சாராயம் கடத்தி வந்து தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.