புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
அப்பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த அங்குள்ள திறந்தவெளி திடலில் பந்தல் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மழைக் காலங்களில் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத சூழலில் திருநகர் பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் புதிய சமுதாய கூடம் ஒன்றை அரசு கட்டிகொடுத்தது.
சமுதாய கூடம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை அது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து திடலில் பந்தல் அமைத்து தங்களது வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அவர்கள் புதுச்சேரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத புதுச்சேரி அரசையும், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
காரைக்காலில் பழமை வாய்ந்த நேரு மார்க்கெட் இடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறப்பதற்காக இன்று (அக்.16) புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வர இருக்கின்ற நிலையில் திருநகர் பகுதி மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.