நாட்டில் கரோனா வைரஸால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 706 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,598ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள ஜி.எம்.சி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதித்த 72 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவருக்கான இறுதிச் சடங்கை நடத்துவதற்கு குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, டொமனா பகுதியில் உள்ள ஒரு தகன மைதானத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் முன்னிலையில், இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஆனால், அச்சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று தகன மைதானத்தில் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்களை கற்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களால் கும்பலை சமாளிக்க முடியாத காரணத்தினால், உடனடியாக பாதி எரிந்த உடலை எடுத்துக் கொண்டு குடும்பத்தினரும் சில உறவினர்களும் மட்டும் மீண்டும் மருத்துவமனைக்கே ஆம்புலன்சில் புறப்பட்டுள்ளனர்.
பின்னர், தகவலறிந்து விரைந்த கூடுதல் துணை ஆணையர், உயர் அலுவலர்கள் பாதுகாப்புடன் பகவதி நகர்ப்பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில், உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தினர்.
மக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தினாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறைந்தபாடில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.