கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளர்வுகளின் அடிப்படையில் உள்நாட்டு விமான சேவைகள் மே 25ஆம் தேதிமுதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து விமானங்களின் கட்டணங்கள் குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, "உள்நாட்டு விமான சேவைக் கட்டணங்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஏழு விதமான கட்டணங்களை நிர்ணயித்துள்ளோம்" எனக் கூறினார். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தொடங்கியது.
இந்நிலையில், அனைத்து விமான நிறுவனங்களும், "கேபின் குழுவினர் உள்பட விமான நிலையத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தனி மனித பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) அனைத்து நேரங்களிலும் அணிந்திருப்பர். பயணிகள் பாதுகாப்பு முற்றிலும் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவித்துவருகின்றன.
மேலும், "விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து விமானங்களும், கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படும். விமான பயணத்தின்போது பயணிகளுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கு ஏற்ப கேபின் ஊழியர்கள் பயிற்சி பெற்றிருப்பர்" எனவும் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: 'மண்ணுக்காக உயிர்நீத்த என் மகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெற வேண்டுமா?' - ஸ்னோலின் தாயார்