உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் செப்டம்பர் 14ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை எழுந்துவரும் நிலையில், ஹத்ரஸ் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநில உள்துறை செயலாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு ஏழு நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், 'மகளை காப்பாற்றுங்கள்' என்று முழங்கும் பாஜக, 'உண்மைகளை மறை, அதிகாரத்தை கைப்பற்றுகள்’ என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.