புதுச்சேரியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தனியார் பள்ளி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் தொடர் தர்ணா போராட்டம் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து நான்கு நாள்களாக தர்ணா நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி கம்பன் கலையரங்கிலிருந்து பேரணி தொடங்கியது. பேரணியை அரசு ஊழியர் சம்மேளனம் பாலமுருகன் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து பேரணி நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்று மிஷின் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் அருகே சென்றடைந்தது. அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தகவல் கிடைத்து வந்த பெரியகடை காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: 'பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்' - ஸ்டாலின் விமர்சனம்