பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். வருகிற செப்டம்பர் 27ஆம் தேதிவரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறும் 'ஹவுடி மோடி' (howdy modi) பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றான என்.ஆர்.ஜி. உள்அரங்கில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு அந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியுடன் இணைந்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். மோடியுடன், டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளனர். இதற்காக 200 கார்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இருநாட்டு தேசியக்கொடிகளை பிடித்தவாறு ஹூஸ்டன் நகரில் ஊர்வலமாகச் செல்கின்றனர்.
இதில் 1,500 தன்னார்வலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். கூட்டம் முடிந்தபிறகு, 10.30 மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் 400 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக கர்பா நடனக்கலைஞர்களின் நாட்டியம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பிரதமர் மோடியை புகழ்ந்து பாடலும் பாடவுள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஹூஸ்டன் நகரில் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். பிரதமர் மோடியின் உரையை கேட்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். வெளிநாட்டு அரசியல் தலைவருக்கு அமெரிக்காவில் இந்த அளவுக்குக் கூட்டம் கூடுவது இதுவே முதன்முறையாகும்.
பிரதமரின் வருகையை வரவேற்று ஹூஸ்டன் நகரில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிரதமர் மோடி இரவே நியூயார்க் புறப்படுகிறார்.
இதையும் படிங்க:
ஹவுடி மோடி ஹவுடி மோடின்னு சொல்றாங்களே...! - அப்படின்னா என்ன?