இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அரசு சார்பில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) ஒருநாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு கோரிக்கைவிடுத்தார்.
மோடியின் இந்த வேண்டுகேளை ஏற்று பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடித்தனர். இந்த ஊரடங்கு வெற்றிபெற்றதாகவும் அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளுபவர்களைப் பாராட்டியும் பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் நேற்று மாலை வீட்டின் முன் வந்து கைத்தட்டி ஒலி எழுப்பினர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரும்பாலான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காத்துக்கொள்ளுங்கள். மக்கள் முன்னெச்சரிக்கை விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் முடங்கியது நாட்டின் தலைநகர்!