நாளை புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதி, நல்லெண்ணம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை நிறைந்த அனைவருக்குமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அனைத்து புத்தாண்டும் புதிய தொடக்கத்தை உருவாக்க வாய்ப்பு அளித்துவந்துள்ளது. தனிப்பட்ட அளவிலும் சமுதாயமாகவும் மேம்படுத்திக்கொள்ள அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். கரோனா ஏற்படுத்திய இக்கட்டான சூழலிலிருந்து விடுபட காலம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையில் நம்பிக்கை வைத்து கலாசார விழுமியங்களை பலப்படுத்துவதற்கான காலம் இது. அனைவரும் பாதுகாப்பாகவும் நல்ல உடல்நிலையுடனும் இருந்து நாட்டின் வளர்ச்சிக்கான இலக்கை அடைய புதிய ஆற்றலுடன் முன்னோக்கி செல்ல வேண்டும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை மனமார தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.