உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 'காஷி ஏக்ரூப் அனெக்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது சிறு குறு தொழில்களை காக்க புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், "ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் நாட்டில் பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் முறை வெகுவாக மாறியுள்ளது. இந்த மாற்றம் எதிர்காலத்தை வலுப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டுவரும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
இது ஒற்றை சாளர மின் தளவாட சந்தையை உருவாக்க உதவும். மேலும், இதன் மூலம் சிறு குறு தொழில்கள் வலுப்பெறும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சிறு குறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் குறைக்கப்படும். அவை இந்தியாவில் தாயாரிக்கப்படும் பொருள்களைவிட சிறந்தவை அல்ல.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை மத்திய அரசு வரையறுத்துவருகிறது. மத்திய பட்ஜெட்டில், உற்பத்தியையும் வணிகத்தையும் எளிதாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களும் ஸ்டார்ட்அப்களும்தான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'அமெரிக்காவிலிருந்து கோழி கால்கள் இறக்குமதி செய்வது இந்தியவுக்கு பெரும் பாதிப்பு'