உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு தேவி (வயது 25). இவரது கணவர் அசோக் (28). இருவரும் நொய்டாவில் கட்டடத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
அஞ்சு தேவி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கரோனா (கோவிட்19) வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மார்ச் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு நாள் மக்கள் ஊரடங்கு, வைரஸின் தீவிரம் கருதி மேலும் 21 நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கினர். சர்வதேச எல்லைகள் மூடப்பட்டது போல், மாநில மாவட்ட, கிராம எல்லைகளும் மூடப்பட்டன. நாட்டின் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனால் உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்காமல் அஞ்சு தேவி மற்றும் அவரின் கணவர் அசோக் ஆகியோர் அவதியுற்றனர். இந்நிலையில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவெடுத்து, காவலர்களின் கடுமையாக நெருக்கடிகளுக்கு இடையே 200 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஜாலன் ராத் பகுதியிலுள்ள அவர்களின் சொந்த ஊரான அவுண்டா கிராமத்தை சென்றடைந்தனர்.
இது குறித்து அஞ்சு தேவி கூறுகையில், “மிகுந்த நெருக்கடியில் உண்ண உணவின்றி நடந்தே வந்தோம். எங்களிடம் காசும் இல்லை. எங்களுடன் நடந்து வந்தவர்கள் உணவு கொடுத்து உதவினார்கள்” என்றார்.
அஞ்சு தேவிக்கு தற்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரை 14 நாள்கள் தனிமையில் இருக்க சுகாதாரப் பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடு முழுக்க 144 தடை உத்தரவு, பொதுப் போக்குவரத்து நிறுத்தம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் குறிப்பாக தினக்கூலி தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவு கிடைக்காமலும், தங்க இடமின்றியும், சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாமலும் அவர்கள் அவதியுற்றுவருகின்றனர்.
இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதியுறும் தொழிலாளர்கள், கரோனா வைரஸ் தாக்கத்தை காட்டிலும் பசியால் உயிர் ஓடோடி விடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: சீன அதிபருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்!