காட்டு யானை ஒன்று கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது கிராமவாசிகள் சிலர், அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்துவைத்து, அந்த யானைக்கு கொடுத்ததாகத் தெரிகிறது.
யானை அந்த அன்னாசிப் பழத்தை கடித்தபோது, வெடி வெடித்து அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தினால் ஏற்பட்ட கடும் வலியுடன் வெள்ளாறு நதியில் இறங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள், கும்கி யானைகளின் உதவியுடன் கர்ப்பிணி யானையை மீட்க முயன்றனர்.
ஆனால் கர்ப்பிணி யானை அதற்கு அனுமதிக்கவில்லை. ஆற்றிலேயே நீண்ட நேரம் நின்ற அந்த யானை, மே 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இச்செய்தியை கேரள வனத்துறை அலுவலர் மோகன் கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்த்திருந்தார். இக்கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மன்னார்கட் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையை வனத்துறையினரும் காவல் துறையினரும் இணைந்து தொடங்கியுள்ளனர்.
நேரடி சாட்சிகள் இல்லாத காரணத்தில் வலுவான ஆதாரம் கிடைத்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்ற மன்னார்கட் காவல் துறையினர், அங்குள்ள உள்ளூர் மக்களிடமும் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் தேசியளவில் எழுந்துள்ள அழுத்தம் காரணமாக வனத் துறையினர் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பொது முடக்கத்தின் போது ஊழியர்களுக்கு ஊதியம்! தீர்ப்பு ஒத்திவைப்பு