அரசியலமைப்பை நிறுவிய மக்கள்தான் அதிகாரத்தின் ஆதாரம் என முகப்புரையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றும் மக்களின் உரிமைகள், அவர்களின் நம்பிக்கைகள் ஆகியவை குறித்து முகப்புரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் நோக்கங்கள், இலக்குகள் ஆகியவை முகப்புரை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்ததாக அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் நேரு தெரிவித்தார். மொத்தத்தில், அரசியலமைப்பின் அடிப்படையை முகப்புரை பிரதிபலிக்கிறது.
இந்திய மக்களாகிய நாங்கள், இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அறிமுகப்படுத்தினோம். இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயக சோசியலிச குடியரசு நாடாக பிரகடனப்படுத்துகிறோம்.
அரசியலைப்பின் நோக்கங்கள்:
- அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி அளிப்பது.
- கருத்து, மதம், நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரம்.
- அனைவருக்கும் சம அந்தஸ்து, வாய்ப்புகள் அளிப்பது.
- தனிப்பட்டவர்களின் கண்ணியத்தை காத்தல், தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்டல்.
இறையாண்மை:
இறையாண்மைக்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட நாடு என்பது பொருள். வெளிப்புற அதிகாரத்தை நம்பி நம் நாடு இல்லை. சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதன் மூலம் மற்ற நாடுகள் நம் மீது அதிகாரத்தை செலுத்த முடியாது.
சோசியலிசம்:
பொருளாதார நீதி, சமத்துவம் ஆகியவை இலக்காக அடைதல். வளங்களை சமூக நோக்கத்திற்காக பயன்படுத்துவது.
மதச்சார்பின்மை:
அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது.
குடியரசு:
அதிகாரம் மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் இருத்தல். மக்களுக்கான அரசு என்பது பொருள். சோசியலிசம், மதச்சார்பின்மை, நேர்மை உள்ளிட்ட வார்த்தைகள் முதலில் அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்படவில்லை. 42ஆவது சட்ட திருத்தம் கொண்டுவந்ததன் மூலம், 1976ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.