இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடியின் வெற்றிக்கு இவரின் பங்கு முக்கியமானது. இது மட்டுமின்றி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார்.
அதைத்தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காகவும் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்காகவும் தேர்தல் வியூக வல்லுநராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், கோவிட்-19 தொற்றால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைச் சமாளிக்க பிரசாந்த் கிஷோர் கொல்கத்தா சென்றதாகத் தகவல் வெளியானது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி சரக்கு விமானம் மூலம் பிரசாந்த் கிஷோர் கொல்கத்தா சென்று திரும்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "என் மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. நான் கொல்கத்தாவுக்குச் செல்லவில்லை. அதேபோல ஊரடங்கு விதிகளை நான் மீறவும் இல்லை. மத்திய அரசு இது குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
ஊரடங்கு உத்தரவை மீறி பிரசாந்த் கிஷோர் கொல்கத்தா சென்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: "தேவை அமைதியே, கரோனா அல்ல" அஸ்ஸாம் ரைபில்ஸை விரட்டியடித்த கிராம மக்கள்