ஒடிசாவி்ன் மகாநதி பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய இடங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் திட்டம் இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டு அறக்கட்டளையால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் வாயிலாக, பத்மாவதி பகுதியில் விஷ்ணுவை வணங்குபவர்களால் கட்டப்பட்ட கோபிநாத் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில், ”இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையினர் 500 ஆண்டுகள் பழமையான கோயிலைக் கண்டறிந்துள்ளனர்.
ஒடிசாவின் நாயகர் மாவட்டம் அருகிலுள்ள பத்மாவதி கிராமத்தின் மகாநதி ஆற்றுப்பகுதியான பைதேஸ்வர் எனும் இடத்தில், விஷ்ணுவின் ஒரு வடிவமான கோபிநாத்தை கடவுளாக ஏற்று இங்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 500 ஆண்டுகள் பழமையான கோயில், தற்போது மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கியுள்ள கோயிலானது 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ 55 - 60 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என அதன் கட்டுமானம், கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களைக்கொண்டு கணித்துத் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலின் வரலாறு, கலாச்சாரம், மத முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, கோயிலை மறு சீரமைப்பதற்கும், பொருத்தமான இடத்திற்கு கோயிலை மாற்றுவதற்கும் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறையினரை வழி நடத்துவதில் அமைச்சகத்தின் தனிப்பட்ட தலையீடு வேண்டும்.
இந்தியத் தொல் பொருள் ஆய்வு மையம், இந்த பழமையான கோயிலை பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதற்கும் அதை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளையான ’இன்டாக்’ விரும்புகிறது. மேலும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தேவையான தொழில்நுட்பமும், தொல்பொருள் ஆய்வு மையத்திடமே உள்ளது எனத் தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வீரமரணமடைந்த தெலங்கானா வீரருக்கு இறுதிச்சடங்கு!