கரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களை அடையாளம் காணும் வகையில் அவர்களின் வீட்டின் வெளியே சுவரொட்டி ஒட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களை அடையாளம் காணும் வகையில்தான் அவர்களின் வீட்டின் வெளியே சுவரொட்டி ஒட்டப்பட்டுவந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட துறைகளின் உத்தரவு இல்லாமல் இனி அதனை ஒட்ட வேண்டாம் என நீதிமன்றம் தெரிவித்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியோடு சில வழக்குகளில் சுவரொட்டியை ஒட்டலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பாக முன்னிலையான அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "சுவரொட்டி ஒட்டுவது குறித்து மத்திய அரசு எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக சில மாநிலங்கள் முன்வந்து இதனை மேற்கோள்கிறது" எனத் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு தாக்கல்செய்த பதில் மனுவில், "சுகாதாரத் துறை அமைச்சகம் மூலம் மத்திய அரசு, பல்வேறு மாநில அரசின் தலைமைச் செயலர்கள், கூடுதல் தலைமைச் செயலர்கள், சுகாதாரத் துறைச் செயலர்கள் ஆகியோருக்கு அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆணையை பிறப்பித்திருந்தது.
அதில், கரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் வீட்டின் வெளியே சுவரொட்டி ஒட்டுவது குறித்து எந்தவிதமான ஆணையையும் பிறப்பிக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இது குறித்த வழக்கின் விசாரணையின்போது, பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் வீட்டின் வெளியே போஸ்டர் ஒட்டுவதால் அவர்கள் தீண்டாமைக்குள்ளாக வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
முன்னதாக, குஷ் கல்ரா என்பவர், பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் வீட்டின் வெளியே போஸ்டர் ஓட்டுவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சுவரொட்டி ஒட்டுவதால் கரோனா பாதிப்புக்குள்ளாவர்களின் அடையாளம் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் பரப்பப்பட்டு அவர்கள் மீது தேவையில்லாத களங்கம் விளைவிக்கப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.