நாடு முழுவதும் கரோனாவிலிருந்து மீண்டு வந்த நபர்கள் பல்வேறு சுகாதார பிரச்னைகளுக்கு ஆளாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையை அறிந்த மத்திய அரசு, தற்போது கரோனாவிலிருந்து மீண்டுவந்தவர்களுக்கென தனியாக மருத்துவமனை தொடங்க சுகாதார அமைச்சகத்தின் மூலம் முன்முயற்சிகளை எடுத்துவருகிறது.
கரோனா பாதிப்புகள் தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்த மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் கார்க், "கரோனா தொற்று உண்மையில் ஒரு தீவிரமான பிரச்னை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அதிலிருந்து முழுமையாக குணமடையும் வரை சரியான முறையில் கையாள வேண்டும்" என்று கூறினார்.
"கரோனாவால் பாதிக்கப்பட்ட இளையவர்கள் அதிலிருந்து விரைவில் குணமடைவதை காணலாம், அதே நேரம் வயதானவர்கள் இந்த தொற்றிலிருந்து குணமடைய அதிக காலம் தேவைப்படுகிறது. கரோனாவிலிருந்து பூரண குணமடைந்த நபரின் உடல்நிலையை பின்தொடர்வது அவசியம். உண்மையில், தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிற உடல்சார்ந்த சிக்கல்கள், வேறு சில நோய்களுக்கு ஆளாவதாக தெரியவருகிறது. இந்நிலைமையைச் சமாளிக்க மனரீதியில் வலுவாக இருக்க வேண்டும்” என்று டாக்டர் கார்க் கூறினார். குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல், காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் உடல் வலி ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பது கரோனாவிற்கு பிந்தைய நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறியாகும். இது தீவிரமாக இருக்கக்கூடும் என்பதால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதுதொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய மற்றொரு மூத்த சுகாதார நிபுணர் டாக்டர் தாமோரிஷ் கோல், " கடுமையான கரோனா பாதிப்பிற்கு பிறகு, மீட்கப்பட்ட நோயாளிகள் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளையும் தொடர்ந்து தெரிவிக்கலாம். கரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடல்நிலையை பின்தொடர்ந்து அவர்களுக்கு ஒரு முழுமையான சிகிச்சை அளிப்பது முக்கியமாகும். ஆழ்ந்த சோர்வு, இருதய பிரச்னைகள், உடல்நலக்குறைவு தலைவலி ஆகியவை பொதுவாக மக்களிடையே காணப்படும் அறிகுறிகளின் முக்கிய தொகுப்பாகும்” என்று கூறினார்.
மேலும், "கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆண்கள் அதிகளவில் உயிரிழப்புக்கு ஆளாவதைப்போல், கரோனாவிற்கு பிந்தைய நோய் அறிகுறியால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஹைபோடென்ஷன், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரோனா அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது" என்று டாக்டர் கோல் கூறினார்.