ஆந்திர மாநிலத்தின் அருகே உள்ளது புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த 14 பேர் வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்று புதுச்சேரி ஏனாம் பகுதிக்கு திரும்பினார்.
அவர்கள் ஏனாம் பகுதி எல்லையில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை ஏனாம் பகுதிக்குள் வர அனுமதிக்க வேண்டும் என அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தினார். ஆனால், ஏனாம் நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கருப்பு உடை அணிந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போராட்டத்தை கைவிடுமாறு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவர் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் , “ஏனாம் பகுதியைச் சேர்ந்த 14 பேர் தனது தொகுதி மக்கள். அவர்கள் ஆந்திரப் பகுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு உணவின்றி தவித்துவருகின்றனர். அவர்களுக்கு அரசு கரோனா பரிசோதனை மேற்கொண்டு அனுமதிக்கவேண்டும். தனது மேல் உள்ள கோபத்தால் ஆளுநர் தூண்டுதலின்பேரில் அலுவலர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்துவருகின்றனர். இதனால்தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராஜினாமா செய்யப்போகிறேன்! மல்லாடி கிருஷ்ணாராவ் மிரட்டல்!