புதுச்சேரி: புதிதாக 178 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் இன்று 782 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 178 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 37 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 22 ஜிப்மர் மருத்துவமனையிலும், 9 பேர் காரைக்காலிலும், 42 பேர் ஏனாம் பகுதியிலும், 2 பேர் மாஹேயில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க காத்திருப்பில் உள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேரும், ஜிப்மரில் ஒருவரும் என மொத்தம் இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 56 பேர் கரோனவால் உயிரிழந்துள்ளனர்.
100 கி.மீ., வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பலி!
இதுவரை மொத்தமாக புதுச்சேரியில் 3982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.