புதுச்சேரி: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் பிரியங்கா, ராகுல் காந்தி கைதை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இச்சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய நாராயணசாமி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின பெண்கள் கற்பழிப்பு சம்பவம் தொடர் கதையாகிவருவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி நிறைவுரை நிகழ்த்தினார். அதில், "மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை மட்டும் நமக்கு விதிப்பார்கள். நரேந்திரமோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வாதிகாரப் போக்காக உள்ளது.
நாம் இன்னொரு சுதந்திரப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம். தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லை, மகளிர் பாதுகாப்பு இல்லை, மீனவர்கள் பாதுகாப்பு இல்லை. நரேந்திரமோடி அரசு மாநிலங்களுக்கு உண்டான அதிகாரத்தை எடுத்துக்கொண்டது" என்றார்.
மேலும், நரேந்திரமோடி அரசு ஹிட்லர் ஆட்சி என்று பேசிய அவர், நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "மக்கள் இந்தியாவில் ஜனநாயகம் இல்லாமல் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள். உத்தரப் பிரதேச முதலமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பெண்ணின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செய்தபின்பு, பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்துவைக்கப்பட்டது.