ஜம்மு - காஷ்மீரின் மூத்த காங்கிரஸ் தலைவரான ராமன் பல்லாவுக்கு இரண்டு பக்கங்களில் உருது மொழியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பு சார்பாக எழுதிய மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில், ''மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், ராமன் பல்லா, முன்னாள் பாஜக தலைவர் தேவேந்தர் சிங் ராணா, லால் சிங், ஹர்ஷ் தேவ் சிங், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் என 17 பேர் அரசியலை கைவிட்டு எங்களின் சுதந்திரத்திற்கான காரணத்தை ஆதரிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறோம். உங்களுக்கு எதிராக மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த பாதுகாப்பும் எங்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றாது. வரும் நாள்களில் இந்தியாவை ஆதரிக்கும் யாரும் காஷ்மீரில் உயிருடன் இருக்க மாட்டார்கள்'' என ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் சார்பாக எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு ராமன் பல்லா தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் தரப்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னர் ராமன் பல்லா கூறுகையில், ''இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட போவதில்லை. கடந்த 30 வருடங்களாக பாகிஸ்தான் உத்தரவின் பேரில் கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நின்றுள்ளோம். இனி ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக எங்கள் கடமைகளைச் செய்வோம்'' என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே நாளில் 94 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிப்பு!