புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்று ஞாயிறு சந்தை (sunday market). ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை இங்கு வியாபாரம் நடைபெறும். இங்கு கிடைக்காத பொருள்களே இல்லை என்று சொல்லலாம். புதுச்சேரியின் பிரதான பகுதியான காந்தி வீதி, நேரு வீதியில்தான் ஞாயிறு சந்தை செயல்பட்டுவருகிறது. தற்போது கரோனா ஊரடங்கால் ஞாயிறு சந்தை செயல்படவில்லை.
இந்நிலையில், இன்று ஞாயிறு சந்தை வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேரு வீதியில் கடைகள் அமைத்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் வியாபாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அனுமதி கிடைத்த பிறகு கடைகள் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
புதுச்சேரியில் கடந்த 10 நாள்களாக தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது வேகமாகப் பரவிவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று மருத்துவ அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனைக் குறைக்க வேண்டும் என்றால், மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் எனப் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார். ஞாயிறு சந்தை நடைபெறும் காந்தி வீதியில் மக்கள் அதிகமாக நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தாய் கண் முன்னே மகள் கடத்தல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!