இந்தியாவில் பாலின வித்தியாசமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கெதிரான போக்சோ சட்டம் 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல், பாலியல் அத்துமீறல்/வரம்புமீறல், ஆபாசப் படமெடுக்க குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
வழக்கின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, விசாரணை, வாக்கு மூலம் பதிவுசெய்வது, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனே மையமாக இருக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை போக்சோ சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட வழக்குகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையமும் துடிப்பாக செயல்பட்டு இயன்றவரை குற்றங்களை தடுக்கமுற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆவண காப்பகமும் இல்லை.
இப்படி தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவிலும் பல 'இல்லை' இருப்பதால் பெரும்பாலான போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால், உச்ச நீதிமன்றம் 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.