இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கக்கூடிய நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் முடக்கி வைத்திருப்பது மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது. இந்த சாலையை முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே, திறப்புவிழா தாமதப்படுத்தப் படுவதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் கூறியுள்ளனர். லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கிய சாலையின் திறப்பு விழா, தனி மனிதருக்காக தாமதப்படுத்தப்படக்கூடாது.
தேசிய நெடுஞ்சாலை 45, தேசிய நெடுஞ்சாலை 205, தேசிய நெடுஞ்சாலை 4, தேசிய நெடுஞ்சாலை 5 ஆகிய நான்கு தேசிய நெடுஞ்சாலைகளை சென்னை வெளிவட்டச்சாலை இணைக்கிறது. இத்தகைய முக்கியமான சாலை ரூ.1075 கோடிக்கும் கூடுதலான செலவில் அமைக்கப்பட்டு, யாருக்கும் பயன்படாமல் கிடப்பது நல்லதல்ல. இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு சூழலை உருவாக்கிவிடக் கூடாது.
இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வரும் சரக்கு ஊர்திகளும், திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களும் சென்னை மாநகருக்குள் நுழையாமலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியும். இதன் மூலம் சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே, வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஏழு பேரை விடுதலை... விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ்