நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (செப்.14) தொடங்கவுள்ளது. கரோனா வைரஸிற்கு நடுவே மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கவுள்ளதால், அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விவகாரங்களும் எழுத்து மூலம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சீன எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதம் கூடாது என்பது நகைப்பாக உள்ளது. சீன எல்லைப் பிரச்னை பற்றி நிச்சயம் விவாதம் தேவை. பிரதமரின் ஒரு அறிக்கை நமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
1962ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த போர் பற்றி விவாதம் செய்வதற்காக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் விமர்சனத்தைக் கேட்டுக்கொண்டு மக்களவையில் நேரு அமர்ந்திருந்தார்.
அதனால் நிச்சயம் காங்கிரஸ் சார்பாக சீனப் பிரச்னை பற்றி விவாதம் மேற்கொள்ள கேட்போம். அதனோடு பிஎம் கேர்ஸ் பற்றியும் கேள்வி எழுப்புவோம்.
நாடாளுமன்றம் என்பது விவாதத்திற்கான களம். அங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். ஓடவதற்கான இடம் அல்ல.
நாங்கள் விவாதங்களில் வெற்றிபெறுவதற்காக பேசவில்லை. இது தேசிய அளவிலான பிரச்னைகள். நாடு முழுவதும் பொருளாதார சரிவு, கரோனா சூழல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, விமான நிலையங்களின் தனியார்மயம், எதிர்க்கட்சியினர், அமைப்புகளில் உள்ள முக்கிய புள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்தல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி நிச்சயம் கேள்வி எழுப்புவோம்'' என்றார்.
இதையும் படிங்க: சுயசார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!