அயோத்தி: அயோத்தியை வேத இராமாயண நகரம் ஆக மாற்ற வேண்டும் என்றும் அது அழகிய நகராக இருக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (நவ.13) கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியை குறிக்கும் 4ஆவது நாளான, தீபொத்ஸவ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “எங்கள் தலைமுறை ராமர் கோயில் கட்டுமானத்தை காணும் பேறு மட்டுல்ல, அதன் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விலும் பங்கெடுத்துள்ளது. 500 ஆண்டுகால போராட்டத்தில், பல புனிதர்கள் ராமர் கோயில் கட்டுமான கனவுடன் மறைந்தார்கள். அயோத்தியில் ராம ராஜ்ஜியம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
முன்னதாக நான் அயோத்திக்கு வளர்ச்சி பணிகளுக்காக வந்தேன். அப்போது அம்மக்கள், “யோகி ஜி, ராம் மந்திர் நிர்மான் கர்வாயே (யோகிஜி ராமர் கோயில் பணிகளை வெற்றிகரமாக முடியுங்கள்)” என்றார்கள். நான் அவர்களிடம், “பிரதமர் நரேந்திர மோடியை நம்புவோம்” என்று கேட்டுக்கொண்டேன். அயோத்தியை வேதகால இராமாயண நகரம் ஆக மாற்றுவது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.
அது மிகவும் அழகிய நகராக இருக்க வேண்டும். அயோத்தியை வேதகால இராமாயாண நகரம் ஆக மாற்ற உங்களின் ஆதரவு தேவை. அதற்காகவே வந்துள்ளேன். கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் இல்லையென்றால் இவ்விழா மிகப்பெரிய அளவில் நடந்திருக்கும். உலகெங்கிலும் இருந்து இந்தியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருப்பார்கள்.
கொரியா, தாய்லாந்து, நேபாளம், ஜப்பான், பிஜூ உள்ளிட்ட நாடுகளுக்கும் அயோத்தியுடன் தொடர்புகள் உள்ளன. அயோத்தி நகர் உடனான தொடர்புகள் அவர்களுக்கு ஒரு நவீன வழியை காட்டியது” எனக் கூறினார். மேலும் மத்திய அரசு கோவிட்-19 பெருந்தொற்றை சிறப்பாக எதிர்கொண்டது என்றும் பாராட்டினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ஒரு வலிமையான தலைவரின் தலைமையில் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொண்டு தோற்கடித்துள்ளோம்” என்றார். இருப்பினும், கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் வரை மக்கள் முகக்கவசம் அணிய மறுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில் ஆளுநர் அனந்திபென் பட்டேல், துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியா, பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், இந்து மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமானாலும் அயோத்தி வரலாம் - ஸ்ரீராம ஜன்மபூமி அறக்கட்டளை