காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை 9 மணிக்கு இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தொடங்கவுள்ளது. ஐ.டி.சி. கிராண்ட் சோழாவிலிருந்து தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் (ITC Grand Chola to Taj Fishermen's cove) உணவகத்திற்கு காலை 9 மணிக்கு சீன அதிபர் புறப்படவுள்ளார்.
9:40 மணிக்கு தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் உணவகத்திற்கு வந்தடையும் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு மச்சான் (Machan) உணவகம் வரை மரங்களின் நிழல் வழியே சிறிது நேரம் இருநாட்டுத் தலைவர்களும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். டெட்-இ-டெட் (Tete-e-tete) சிற்றுண்டி உணவகத்தில் தேநீர் இடைவேளை நடைபெறவுள்ளது. பின்னர், அங்கிருந்து டான்கோ ஹாலுக்கு (Tango Hall) இருநாட்டுத் தலைவர்களும் புறப்படுகின்றனர். காலை 11:30 மணிக்கு நடைபெறவுள்ள உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு, கசாரினா உணவக விடுதியில் இருநாட்டுத் தலைவர்களும் (Casuarina Hall) மதிய உணவு உண்ணவுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஜி ஜின்பிங் செல்லவுள்ளார்.