காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று நிகழவுள்ளது. சீனா சார்பில் ஜி ஜின்பிங்குடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இந்தியா சார்பில் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இரு நாட்டின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பாதுகாப்புப் படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்விதமாக போர்கப்பல்களை இந்திய கடற்படை மாமல்லபுரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் சீனா தன் ஆதரவை பாகிஸ்தானுக்கு தெரிவித்த நிலையில் நடக்கும் முதல் சந்திப்பு இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.