குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 31) காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தின் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய சுகாதார அமைச்சர் ஹா்ஷ் வா்தன், இணை அமைச்சர் அஸ்வின் சௌபே ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மத்திய பிஎஸ்யூ எச்எஸ்சிசி லிமிடெட் நிறுவன வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த மருத்துவமனைத் திட்டத்திற்காக ராஜ்கோட் நகரின் புகா் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1195 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
750 படுக்கைகளைக் கொண்ட இந்த நவீன மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் கட்டடமும் அமைக்கப்படும். இங்கு 125 எம்பிபிஎஸ் இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் இருக்கும். இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.