கரோனா பாதிப்பை எதிர்கொள்ள சர்வதேசத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் காணொலி மூலம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுகாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தச் சூழலை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி, இரு நாடுகளும் சர்வதேச நன்மைக்காக செயல்படுவோம். குறிப்பாக, இரு நாட்டு ராஜரீக உறவும், சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு நிச்சயம் உதவும். எனவே, இரு நாட்டின் உறவையும் பலப்படுத்த இதுவே சரியான நேரம், சரியான வாய்ப்பு' எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு சர்வதேசத் தலைவருடன் காணொலி மூலம் இருதரப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி மேற்கொள்வது இதுவே முதன்முறை. இரு நாடுகளுக்கும் இடையே கடந்தாண்டு வர்த்தக நடவடிக்கையாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 512 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் கடற்சார்ந்த ராணுவம், வர்த்தகம் ஆகிய துறைகளில் கூட்டு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றன.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து தப்பிக்க மலேரியா மருந்தை எடுத்துக்கொண்ட ட்ரம்ப்!