பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் இன்று நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
இது பிகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இரண்டாவது தேர்தல் பயணமாகும். முன்னதாக, அவர் அக்டோபர் 23ஆம் தேதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மூன்று தேர்தல் பேரணிகளில் உரையாற்றினார்.
பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (எஸ்.பி.ஜி) மூத்த அலுவலர்கள், பேரணி நடைபெறும் இடத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக தர்பங்கா மாவட்ட ஆட்சியர் எஸ் எம் தியாகராஜனுடன் ஆலோசனை நடத்தியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் இல்லாமல் யாரையும் அந்த இடத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும், பிரதமருடன் கலந்துகொள்ளும் நபர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி முசாபர்பூர் மாவட்டம் மோதிபூரில் நடைபெறுகிறது. பேரணி நடைபெறும் இடங்களில் தகுந்த இடைவெளியுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மற்றொரு தேர்தல் பேரணி பாட்னாவில், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கால்நடை கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.