உத்தரப் பிரதேசம், ஜான்சியில், ராணி லஷ்மிபாய் மத்திய வேளாண் பல்கலைகழகத்தை பிரதமர் மோடி இன்று (ஆக.29) காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அப்போது, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண் துறையின் பங்கு குறித்த முக்கியக் கருத்துகளை அவர் பேசினார்.
அதில், ”நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தவும், சிறு தொழிற்சாலைகள் அமைக்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளை தொழில்முனைவோராக முன்னேற்றும் நோக்கத்தை அரசு கொண்டுள்ளது.
விவசாயிகள் தொழில்முனைவோராகும் பட்சத்தில், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதன் மூலம் ’தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை அடைய விவசாயம் முக்கியப் பங்காற்றும்” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பாஜகவின் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு