ஜப்பான் பிரதமர் சின்சோ அபே உடல் நலம் பாதிப்பால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 10) பிரதமர் சின்சோ அபேயுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த உரையாடல் குறித்து வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த சில ஆண்டுகளில் இருநாட்டுக்கும் இடையில் உருவான உறுதியான கூட்டாண்மை இனியும் தொடரும் என இருநாட்டு தலைவர்களும் நம்பிக்கைத் தெரிவித்தாகக் குறிப்பிட்டிருந்தது. இருநாட்டுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தியதற்காக சின்சோ அபேவுக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் உடல்நலம் குறித்தும் தெரிந்து கொண்டார். இந்திய ஆயுதப் படைகள், ஜப்பானின் தற்காப்புப் படைகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இருதலைவர்களும் ஆதரித்து வரவேற்றனர்.
இதனிடையே, இந்தியாவும் ஜப்பானும் பல ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ராணுவ தளவாட ஆதரவுக்காக முக்கிய ஒப்பந்தத்தில் நேற்று (செப்டம்பர் 9) கையெழுத்திட்டன.
இதையும் படிங்க: பிரதமரால் சூடுபிடித்த இந்திய ரக நாய்களின் விற்பனை!