பல்வேறு மொழிகள், இனம், கலாசாரத்தைக் கொண்ட நாடான நமது இந்திய நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் விதமாக 'ஒரே இந்தியா, வளமான இந்தியா' என்ற இயக்கத்தை பாஜக அரசு தொடங்கி நடத்திவருகிறது. இந்நிலையில், இந்த இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னையில் சந்தித்துவிட்டு டெல்லி திரும்பிய மோடி, இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முக்கிய விவகாரங்களில் தேச நலனை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் பல்வேறுபட்ட கலாசாரத்தைப் போற்றும் விதமாகவும் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி 2015ஆம் ஆண்டு 'ஒரே இந்தியா, வளமான இந்தியா' என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.