ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக உருவாகியுள்ள அப்னி கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரின் முக்கியக் கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பிரிந்துவந்து இந்த அப்னி கட்சியை தற்போது உருவாக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்தத் தலைவருமான அத்லப் புகாரி அப்னி தல் கட்சிக்குத் தலைமையேற்றுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் அவர், ஜம்மு காஷ்மீர் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பிரதமர் மோடி நன்கு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி விரைவில் திரும்ப அளிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாகக் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அங்கு முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பரூக் அப்துல்லா தற்போது விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல் துறை!