ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற மருத்துவரும், முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் மைத்துனருமான மருத்துவர் முஹம்மது அலி மட்டூ, நேற்று உடல் நலம் குறைபாடு காரணமாக மறைந்தார்.
இதனையடுத்து ஒமர் அப்துல்லா பொதுமக்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில், “உங்கள் வீடுகளிலிருந்தவாறே நீங்கள் உங்கள் அஞ்சலியை செலுத்துங்கள், அவர்வர் வசிப்பிடங்களிலேயே இருந்தவாறு உங்கள் துவாவை மேற்கொள்ளுங்கள்.
தயவு செய்து யாரும் முஹம்மது அலி மட்டூவின் இல்லத்திலோ அல்லது மயானத்திலோ ஒன்று கூட வேண்டாம். அதுவே அவருடைய ஆன்மாவுக்கு அமைதியைத் தரும். இந்த இக்கட்டான சூழலில் எங்கள் குடும்பத்தினர் சார்பில் அனைவரிடமும் நான் வைக்கும் வேண்டுகோள் இதுவே.” என்றார். கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதால் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், மருத்துவர் முஹம்மது அலி மட்டூவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவில் ஒமர் அப்துல்லாவின் சமூகப் பொறுப்புணர்ச்சியை பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, " உங்களுக்கும் உங்களது முழு குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள, @ ஒமர் அப்துல்லா. மருத்துவர் முஹம்மது அலி மட்டூவின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். எந்தவொரு பெரிய அளவிலான மக்கள் கூடுகையைத் தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்த ஒமரின் நல்லெண்ணம் பாராட்டத்தக்கது. கோவிட்-19 எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்தும் " என கூறியிருந்தார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : 27.5 லட்சம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.611 கோடி செலுத்திய யோகி ஆதித்யநாத்!