கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, வருகின்ற 17ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று மீண்டும் உரையாற்றினார்.
அப்போது, கரோனா குறித்தும், இந்தியா அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், விரிவாகப் பேசிய மோடி, சரிவில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய புதிய திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளார்.
அதன்படி, “ஆத்மநிர்பார் பாரத் அப்யான்” (தன்னிறைவு இந்தியா) என்ற 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் தொடங்கப்படுவதாகவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 விழுக்காடு என்றும் கூறியுள்ளார்.
மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.