டெல்லி உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்தில் சர்வதேச நீதித் துறை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இரண்டு நாள்கள் நடக்கும் இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நீதித் துறை மாநாடு
மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியை பல் துறை மேதை என்று பேசினார். மாநாட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், “பல் துறை மேதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் உலகளாவில் சிந்தித்து, நாட்டுக்காக செயல்படுகிறார். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாக இருக்கும் பொறுப்புணர்வு நமக்கு உண்டு.
இந்தியா அரசியலமைப்பு கடமைகளுக்கு உறுதியளித்து, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு அமைதியான, பாதுகாப்பான உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் செயல்பாட்டில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
முதுகெலும்பு
இதுமட்டுமின்றி நீதித் துறை முறையை வலுப்படுத்த வேண்டியது நமது அவசியம். தற்போது நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நவீன உள்கட்டமைப்பை நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் தேடுகிறோம்.
நீதித் துறை முறையை வலுப்படுத்துவது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். அதே நேரம் சட்டப்பேரவை இதயம், நிர்வாகம் மூளை. மாநிலத்தின் இந்த மூன்று உறுப்புகளும் சுயாதீனமாகச் செயல்பட வேண்டும்.
அநீதி, சமத்துவமின்மை போன்ற உணர்வுகள் நம்மீது பெருமளவில் உருவாகின்றன. இது கொரோனா வைரஸைப் போல ஆபத்தானதாக மாறுவதற்கு முன்பாக நம் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
நீதிபதி அருண் மிஸ்ரா, பதவி மூப்புப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: நிர்பயா கைதி வினய் மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு