டெல்லி: வங்க தேசத்தில் அடக்குமுறைகளைக் கையாண்ட பாகிஸ்தானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய ராணுவம் 1971ஆம் ஆண்டில் போரிட்டு வெற்றிபெற்றது. இந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் விஜய் திவாஸ் அல்லது வெற்றி தினம் எனக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியா இன்று 50ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடுகிறது.
மலர்வளையம்
இந்திய ராணுவ வீரர்களின் திறமைகளையும், தியாகத்தையும் இந்நாளில் பல்வேறு தலைவர்களும் நினைவுகூர்ந்துவருகின்றனர். இந்நிலையில், போரில் வெற்றிகண்ட இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக டெல்லியிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படைகளின் ராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அவர்கள் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
வீரர்களின் ஊர்களுக்குச் செல்லும் நித்தியச்சுடர்
அதுமட்டுமின்றி போரில் உயிர்நீத்த பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா விருதுபெற்ற வீரர்களின் கிராமங்களிலிருந்து போர் நினைவுச் சின்னத்திற்கு மண் கொண்டுவரப்பட்டது. மேலும், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் ஏற்றிவைத்த நித்திய சுடர் வீரர்களின் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உலக வரைபடத்தை மாற்றியமைத்த வீரர்களுக்கு வெற்றி தின வாழ்த்துகள் தெரிவிக்கும் தலைவர்கள்