சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "அண்மையில் தமிழ்த் திரைப்பட நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வு குறித்த அறிக்கையை மின்னணு ஊடகங்கள், சமூக ஊடக வலைதளங்கள் செய்தியாக மாற்றியிருந்தன.
அதுகுறித்து முழுமையாக அறியாமல் எந்த புரிதலும் இல்லாமல், பதிவுகளை முறையாக ஆராயாமல், நீதித்துறை நிர்வாக மனப்பான்மை சிறிதும் இன்றி ஒரு தன்னிச்சையான முடிவில், மலிவான விளம்பரத்திற்காக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நீட் நுழைவுத் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட குறிப்பை டி.வி மற்றும் யூடியூபில் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அக்கறையை வெளிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த வகையில் தனது உரிமைக்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். அதில், மாண்புமிகு நீதிபதிகள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை நடத்தி நீதியை வழங்கும் சூழலில் மாணவர்கள் மட்டும் எப்படி கோவிட்-19 பரவல் குறித்து அச்சமின்றி நீட் தேர்வு எழுத முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் நீதிமன்ற அவமதிப்புக்கான எந்த முகாந்திரமும் இல்லை. மனிதநேய அடிப்படையிலும், மாநில உரிமை அரசியல் பார்வையிலும் நீதித்துறை அதன் அரசியலமைப்பு ரீதியாக பலரால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளைத் தான் நடிகர் சூர்யாவும் வெளிப்படுத்தி உள்ளார். அதுவே அவரது நோக்கமாகும்.
இதை உணராமல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு என கூறுகிறார். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் எழுதிய கடிதம் ஊடகங்களில் எவ்வாறு வெளியானது? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை சட்ட விதிமுறைகளை மீறி பொதுவில் வெளியிட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதித்துறை கொள்கைகளுக்கு எதிராக சட்டவிரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற, அதிகார துஷ்பிரயோகமாகவே இதனைக் கருத வேண்டும். அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.