உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க கர்நாடகா தரவாடு மாவட்டத்தின் அஞ்சட்கேரி கிராமத் தலைவர் பசவராஜ் பிட்னல் நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இவர் பள்ளி வளாகத்தின் முன் நின்று கொண்டு, வெளியே வரும் மாணவர்களிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சன்மானமாக 2 ரூபாய் கொடுத்து வருகிறார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏதிராகச் செயல்படும் ஒரு சில கிராமங்களில் அஞ்சட்கேரி கிராமமும் ஒன்று.
பிளாஸ்டிக் இல்லா கிராமமாக அஞ்சட்கேரியை உருவாக்குவதை பசவராஜ் தனது கனவாக வைத்துள்ளார். இதுவரை பள்ளி குழந்தைகளிடமிருந்து 16,000 பிளாஸ்டிக் பாட்டில்களை இவர் சேகரித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பசவராஜின் செயலை பாராட்டினார்.
இதுகுறித்து கிராமத் தலைவர் பசவராஜ் பிட்னல், "பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து கிராம மக்களுக்கு தெளிவுபடுத்துகையில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனாலும் கிராம மக்கள் பிளாஸ்டிக்கைக் கைவிட மறுத்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன். தொடக்கத்தில், கிராம மக்களிடம் எதிர்ப்பு வந்தது, பின்னர் 650 குழந்தைகளின் பங்கேற்பு அவர்களின் மனதை மாற்றியது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 2 ரூபாய் சன்மானத்தை அறிவித்தோம். இதுவே கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உதவியது" என்று தெரிவித்தார்.
கழிவுகளைப் பிரிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட பசவராஜ் திட்டமிட்டார். கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் வங்கியைத் திறக்க அவருக்கு பரிந்துரைத்தனர். இதனால் கிராமத்தில் பிளாஸ்டிக்கை அகற்றுவது மிகவும் எளிதாகியது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக செயல்பட்டுவரும் பசவராஜுக்கு உதவ அஞ்சட்கேரி கிராம மக்களும் முன்வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சி!