புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கெயில் நிறுவன காவேரிப்படுகை பொதுமேலாளர் ஆறுமுகம், ' வரும் பிப்ரவரி 9ஆம் தேதி காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாளைய ஆரோக்கியமான வாழ்விற்கு நடைப்பயணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம். மூன்று கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் பெட்ரோலியப் பொருட்களின் பாதுகாப்பு, பெட்ரோலியப் பொருட்களால் ஏற்படும் மாசு அளவை குறைப்பதற்கான வழிகள் உள்ளிட்டவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
குறிப்பாக, குறுகிய தூரம் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து செல்வதால் நமக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்ந நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்' எனக் கூறினார். மேலும் பேசிய அவர், 'எதிர்காலத்தில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
அதற்கு முதற்கட்டமாக காரைக்கால், நாகப்பட்டினம் பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணி இந்தாண்டு தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் வீடுகளுக்கு ஒரு கிலோ வரை எரிவாயு கொண்டு செல்லப்படும். இத்திட்டம் பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு