உத்தரப் பிரதேசம் குஷி நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவரின் தந்தை இரும்பு பாகங்களை விற்பவர். கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், அவரது தந்தை அரவிந்த் குமாரை தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 48 விழுக்காடு மதிப்பெண்களையும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்ற போதிலும், மருத்துவராவதையே இவர் லட்சியமாக கொண்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் மருத்துவர் தேர்வை எழுதி வரும் இவருக்கு நீட்தேர்வு சவாலை விடுத்துள்ளது. மருத்துவர் தேர்வில் தொடர் தோல்விகளை சந்தித்த போதிலும், அனைத்து தேர்வுகளிலும் ஒரு முன்னேற்றம் இருந்துள்ளது. இதனைக்கண்ட இவரின் குடும்பத்தார் அரவிந்த் குமாரை தொடர்ந்து ஊக்குவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒன்பதாவது முறையாக தேர்வு எழுதி இவர் வெற்றி கண்டுள்ளார். அனைத்திந்திய அளவில் 11603ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் 4 ஆயிரத்து 392ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் குமார் கூறுகையில், “எனது தந்தை ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். எனது தாய் பள்ளிக்கூடத்திற்கு கூட செல்லவில்லை. எனக்கு படித்து நல்ல மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனது வெற்றிக்கு காரணம் குடும்பத்தாரே ஆவர். தொடர்ந்து கடினமாக உழைத்ததன் விளைவாக வெற்றி கண்டுள்ளேன்” என்றார்.