டெல்லியில் காற்று மாசு அபாய நிலையைத் தாண்டியதைத் தொடர்ந்து அதனைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என ஒரு சிலரே கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றதால் இறுதியில் நிலைக்குழுவின் சந்திப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினரான கவுதம் கம்பீருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய - வங்கதேசம் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் வர்ணனை அளித்ததால் மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. எனவே, பலர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இது குறித்து கவுதம் கம்பீர், "எனது தொகுதியில் நான் செய்யும் பணிகளை வைத்துதான் என்னை மதிப்பீடு செய்ய வேண்டும். எனது தொகுதி மக்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது அவதூறு பரப்பும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மக்கள் நம்பமாட்டார்கள்.
பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், பெண்களின் நலனுக்காக சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை பொருத்துதல், ஏழை மக்களுக்கு உணவு அளித்தல் என எனக்காக வாக்களித்த மக்களுக்கு நிறைய பணிகள் செய்துள்ளேன்.
அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நான் செய்ய விரும்புவதில் இது ஒரு விழுக்காடு கூட அல்ல. என் தொகுதி அலுவலகத்திற்கு வரும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்த்த பிறகே நான் எனது வீட்டிற்குச் செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சபரிமலை சென்ற ஆந்திர பெண்கள் தடுத்து நிறுத்தம்